×

மகாதேவ் ஆப் மூலம் சட்டீஸ்கர் முதல்வர் ரூ.508 கோடி பெற்றுள்ளார்: அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி; சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மகாதேவ் பந்தய ஆப் மூலம் முதல்வர் பூபேஷ் பாகேல் ரூ.508 கோடி பணம் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் அதன் விளம்பரதாரர்கள் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பணம் சப்ளை செய்யும் கூரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனைநடத்தி ரூ.5.39 கோடியை பறிமுதல் செய்தது. இதுதொடர்பாக கூரியர் நிறுவனத்தை சேர்ந்த அசிம் தாஸ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

அவரது செல்போனை பரிசோதித்ததில் மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் முக்கிய அதிகாரி ஷூபம் சோனி என்பவருக்கு அசிம் தாஸ் அனுப்பிய மெயிலில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. அந்த இமெயில் அடிப்படையில் இதுவரை ரூ.508 கோடி ரொக்கப்பணம் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவும் விசாரணைக்கு உட்பட்டது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சட்டீஸ்கரில் நவ.7 மற்றும் 17ல் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ராஜஸ்தானில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
இந்தியாவில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் பாதுகாப்பான குழாய் குடிநீரை அளிக்க கடந்த 2019ல் ஒன்றிய அரசு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை கொண்டு வந்தது. அதில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாக ராஜஸ்தான் ஊழல் தடுப்பு இயக்குனரகம் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று ராஜஸ்தான் சுகாதாரம் மற்றும் பொறியியல் துறை கூடுதல் தலைமை செயலர் சுபோத் அகர்வாலுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

* டெல்லி அமைச்சர் ரூ.7 கோடி வரிஏய்ப்பு
டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த்துக்கு எதிராக பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். சுமார் 23 மணி நேரத்துக்கு பின் நேற்று காலை இந்த சோதனைகள் முடிந்தது. இதுபற்றி அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில்,’அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் சீனாவுக்கு ஹவாலா மூலம் பணம் அனுப்பி உள்ளார். மேலும் பல்வேறு இறக்குமதிகளில் சுமார் 7 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பு செய்தார். மேலும் ரூ. 74 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது’ என்று தெரிவித்து உள்ளது.

* ராஞ்சி சிறையில் ரெய்டு
ஜார்க்கண்டில் நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் சாட்சிகளை பாதிக்கவும், சாட்சிகளை அழிக்கவும் சதி நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, பிர்சா முண்டா சிறையில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தியது. அங்கு நிலமோசடி வழக்கில் 2011ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மகாதேவ் ஆப் மூலம் சட்டீஸ்கர் முதல்வர் ரூ.508 கோடி பெற்றுள்ளார்: அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Chief Minister ,Delhi ,Bhupesh Bagel ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை